பதிவு செய்த நாள்
30
ஜூலை
2020
05:07
பூஜைக்கான இடத்தை மெழுகி, கோலமிட்டு மேடை போல அமைக்க வேண்டும். அதை மலர்ச்சரங்கள், கலர் பேப்பர்களால் அலங்கரிக்கலாம். மண்டபத்தின் முன் வாழை இலையில் நெல் பரப்பி, அதன் மீது ஒரு தட்டு நிறைய பச்சரிசி வைக்க வேண்டும். அதன் மேல் கும்பம் இருக்க வேண்டும். கும்பத்தில் அரிசி, காதோலை, தங்க ஆபரணங்கள், கருக மணி, எலுமிச்சம்பழம் ஆகியவற்றால் நிரப்பலாம். கும்பத்தின் மீது நுால் சுற்றி மாவிலைக் கொத்து, தேங்காய் வைக்க வேண்டும், கும்பத்திற்கு புதிய வஸ்திரம் சாத்த வேண்டும். உலோகத்தால் ஆன மகாலட்சுமி முகம் அல்லது மஞ்சளில் செய்த பிம்பத்தை வைக்கலாம். முடியாதவர்கள் மகாலட்சுமி படம் வைத்தும் பூஜை நடத்தலாம்.
வீட்டு வாசலின் உள் நிலைப்படி அருகே கற்பூரம் காட்டி “மகாலட்சுமித் தாயே! எங்கள் இல்லத்துக்கு வருக!” என்று மகிழ்வுடன் வரவேற்க வேண்டும். விநாயகரை மனதில் நினைத்து வணங்கிய பிறகு, மகாலட்சுமி கலசத்தில் எழுந்தருளுவதாக ஐதீகம். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படவும், தீர்க்க சுமங்கலியாக வாழவும் அருள்புரிய பிரார்த்திக்க வேண்டும், மகாலட்சுமி போற்றி, பாடல்களைப் பாடலாம். பூஜை முடிந்ததும் பெண்கள் நோன்புச்சரடை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.