பதிவு செய்த நாள்
06
ஆக
2020
01:08
விழுப்புரம் : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெறுவதை யொட்டி, விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, இந்து மக்கள் கட்சி சார்பில், விழுப்புரம் திரு.வி.க., வீதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.சட்டமன்ற தொகுதி செயலாளர் கோபி தலைமையில் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பொது செயலாளர் மணிகண்டன், நகர அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், மாநில இணை பொது செயலாளர் ஆசைத்தம்பி, கடலுார் மாவட்ட தலைவர் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதே போல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் விழுப்புரம் காமராஜர் வீதியில் அமைந்துள்ள அமராவதி விநாயகர் கோவிலில் நேற்று பகல் 12.40 மணிக்கு, விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்கான நிகழ்ச்சியை டி.வி., வாயிலாக கண்டுகளித்தனர்.