பதிவு செய்த நாள்
16
மே
2012
11:05
சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தினமும் சந்தன அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை என, சிறப்பு பூஜைகள் 19ம் தேதி வரை நடைபெறும்.கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜைகளுக்காக, ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்படுவது வழக்கம். வைகாசி மாத பூஜைக்காக, கோவில் நடை நேற்று முன்தினம் (14ம்தேதி) மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி திறந்தார். அதற்காக அவர் குத்துவிளக்கேந்தி வந்தார்.நடை திறந்த பிறகு அவர், பதினெட்டாம் படி இறங்கி, தேங்காய்களை எரிப்பதற்கான ஆழியில் தீ மூட்டினார்.
பின்னர் அவர், பதினெட்டாம் படி ஏறி, சன்னிதிக்கு திரும்பியதும், இருமுடி ஏந்தி தரிசனத்திற்காக காத்திருந்த திரளான பக்தர்கள் படி ஏற அனுமதிக்கப்பட்டனர். அன்றைய தினம் வேறு பூஜைகள் நடைபெறவில்லை.தொடர்ந்து, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின. நேற்று காலை சகஸ்ரகலச பூஜை நடந்தது. நடை திறந்திருக்கும் நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகளான, புஷ்பாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, சந்தன அபிஷேகம் ஆகியவையும் நடைபெறும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, 19ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி, சுவாமிக்கு விபூதி அபிஷேகம் செய்வித்தும், ஜெபமாலை அணிவித்தும் யோக நித்திரையில் ஆழ்த்தி நடை அடைக்கப்படும்.