பதிவு செய்த நாள்
06
ஆக
2020
04:08
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நின்றநாராயணப்பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். அதிர்ஷ்ட தேவதையான மகாலட்சுமி தவம் செய்த இத்தலத்தை வெள்ளியன்று தரிசித்தால் வாழ்வு செழிக்கும்.
திருமால் பாற்கடலில் சயனித்திருந்த போது ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி ஆகியோருக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள்,‘‘மற்றவர்களைக் காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள். அதிர்ஷ்ட தேவதையான இவளே ‘ஸ்ரீ’ எனப்படுகிறாள். வேதங்கள் இவளை மகாலட்சுமி எனப் போற்றுகின்றன. பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி என்ற திருநாமங்கள் உண்டு’’என புகழ்ந்தனர்.
பூமாதேவியின் தோழியரோ,‘‘உலகிற்கு ஆதாரமான பூமாதேவியே பொறுமை மிக்கவள். இவளைக் காக்கவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார்’’என்றனர். நீளாதேவியின் தோழிகள்,‘‘தண்ணீர் தேவதையாக விளங்குபவள் நீளாதேவி. தண்ணீரை ‘நாரம்’ என்பர். இதனால் தான் பெருமாளுக்கு ‘நாராயணன்’ என பெயர் வந்தது’’ என்றனர். விவாதம் வளர்ந்ததே தவிர முடிந்த பாடில்லை. இதனால் ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க தங்காலமலை என்னும் திருத்தங்கலுக்கு வந்து தவம் செய்யத் தொடங்கினாள். திருமாலும் காட்சி அளித்து ஸ்ரீதேவியே சிறந்தவள் என அருள் புரிந்தார். திருமகள் தங்கியதால் ‘திருத்தங்கல்’ எனப் பெயர் வந்தது.
கோயில் ‘தங்கால மலை’ மீது உள்ளது. மூலவரான ‘நின்ற நாராயணப்பெருமாள்’ நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். செங்கமலத்தாயார் தனி சன்னதியில் இருக்கிறாள். அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்றும் பெயருண்டு. தாயார் நின்ற கோலத்தில் உயரமாக காட்சி தருகிறார். தாயாருக்கு தினமும் திருமஞ்சனம், பெருமாளுக்கு விசேஷ நாளில் தைலக்காப்பும் நடக்கிறது. அனுமன், சக்கரத்தாழ்வாருக்கு சன்னதிகள் உள்ளன. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர் கருவறையில் உள்ளனர். வைகானச ஆகமப்படி பூஜை நடக்கிறது.
சுவேதம் என்னும் தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்தது. இதற்கு தீர்வு காண பிரம்மனிடம் சென்றனர். ‘‘ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் எப்போதும் பள்ளி கொண்டுள்ளார். உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆல இலை மீது பள்ளி கொள்கிறார்,’’என்றார் பிரம்மா. வருத்தமடைந்த ஆலமரம் பெருமாளை நோக்கி தவமிருந்தது. மகிழ்ந்த பெருமாள், “உனது விருப்பம் என்ன?’’எனக் கேட்டார். அதற்கு ‘‘தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளி கொண்டருள வேண்டும்,” என்றது ஆலமரம். சம்மதித்த பெருமாள், “மகாலட்சுமி தவம் புரியும் திருத்தங்கலில் மலை வடிவில் சென்று அமர்வாயாக. நான் லட்சுமியை மணம்புரிய வரும் போது, உன் மீது பள்ளிகொண்டு அருள்புரிவேன்’’ என்றார். ஆலமரம் மலை வடிவில் தங்கியதால் ‘தங்கும் ஆலமலை’ எனப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை ஆனது. பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி தாயார்கள் உள்ளனர். திருமணத் தடை உள்ளவர்கள் திருமஞ்சனம் செய்து புளியோதரை படைத்து வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் வழியில் 20 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடிவெள்ளி, தைவெள்ளி, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 7:00...... 12:00 மணி, மாலை 4:30....... இரவு 8:00 மணி
அலைபேசி: 94426 65443, 94435 70765