கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெப்ப திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2012 12:05
பொன்னேரி: கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவில், 47 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. பொன்னேரி திருவாயற்பாடியில் உள்ள ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா, கடந்த, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. பிரமோற்சவ விழாவில் நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. கோவிலின் பின்புறம் உள்ள சந்தான புஷ்கரணி குளம் சீரழிந்து, குடியிருப்புகளின் கழிவுநீர் குட்டையாக மாறியது. இதனால், கடந்த, 47 ஆண்டுகளாக குளத்தை சுற்றியுள்ள நடைபாதை வழியாக வலம் வந்தது. இது, பக்தர்களின் மனதை வேதனையடைய செய்ததால், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்தாண்டு பொன்னேரி பேரூராட்சியின் பொது நிதியில் குளம் சீரமைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன், மோட்டார் பம்புகள் மூலம் கோவில் குளத்தில் தண்ணீர் தேக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சந்தானபுஷ்கரணி குளத்தில் தெப்பம் விடப்பட்டு, அதில் அலங்கார விளக்குகளுடன் உற்சவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ திருவிழா விடையாற்றி நிகழ்ச்சியுடன் நேற்று முடிந்தது.