பதிவு செய்த நாள்
15
ஆக
2020
10:08
நாமக்கல்: விநாயகர் சதுர்த்திக்காக, விநாயகர் சிலைகள் நாமக்கல் சக்தி நகரில், தயாரிக்கப்பட்டு வருகின்றன. அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் களிமண் மற்றும் கிழங்கு மாவு கொண்டு அவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றிற்கு, தண்ணீரில் கரையக்கூடிய வண்ண பவுடர்களை அழகிய முறையில் ஸ்பிரே மூலமாகவும், பிரஷ் மூலமாகவும் பெயின்டிங் செய்கின்றனர். அரையடி உயரம் முதல், நான்கு அடி உயரம் வரை உள்ள சிலைகள் மண்ணால் செய்யப்படுகின்றன. சிங்கம், யானை, மயில், கருடன், மூஞ்சூறு போன்ற பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்துள்ள சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கலைக்கூடத்தின் உரிமையாளர் பிரபாகரன் கூறியதாவது: வரும், 22ல் விநாயகர் சதுர்த்தி நடக்கிறது. ஊரடங்கால், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாவும், ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பெரிய சிலைகளை வடிவமைக்க முடியவில்லை. தற்போது, சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில், இங்கு தயாரிக்கப்படும் சிலைகள், அரை அடி உயரமுள்ள மண் விநாயகர் சிலை, 30 ரூபாயில் இருந்து உயரத்திற்கு ஏற்றவாறு, 3,000 ரூபாய் வரை தயாரிக்கப்படுகின்றன. நாமக்கல், எருமப்பட்டி, அணியாபுரம், மோகனூர், பாலப்பட்டி, கீரம்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.