பதிவு செய்த நாள்
16
ஆக
2020
12:08
பல்லடம்: கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, வதம்பச்சேரி ஊராட்சி நல்லூர்பாளையத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. அங்கு, ஆடி மாத நிறைவு விழா நேற்று நடந்தது. அதில், ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட புடவையுடன் அம்மன் அருள்பாலித்தார்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "பல நூறு ஆண்டுகளுக்கு முன், நல்லூர்பாளையம் வழியாக ஆங்கிலேயர்கள் படையுடன் செல்லும்போது, பெண்களிடம் தவறாக நடக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க, பெண்கள் அனைவரும் இங்குள்ள அம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை விரட்டி வந்த ஆங்கிலேயர்களுக்கு, கண் பார்வை கோளாறு ஏற்பட்டது. தவறை உணர்ந்த அவர்களிடம், அம்மனை வேண்டி கொள்ளுமாறு, ஊர் மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களின் கண் பார்வை சரியானவை தொடர்ந்து, அம்மனுக்கு பட்டு, மற்றும் கதர் சேலைகள் வழங்கி வழிபட்டனர்.
பெண்கள் கோவிலில் தஞ்சம் அடைந்ததன் காரணமாக, அழகுநாச்சி அம்மன் என்ற பெயர் கொண்ட அம்மன், அன்று முதல், அடைக்கல அம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இச்சம்பவம் நடந்தது, ஆடி மாதம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் மற்றும் கடைசியில், ஆங்கிலேயர் வழங்கிய புடவையை சாற்றி வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாக கடைபிடித்து வருகிறோம். இக்கோவில், பல்வேறு குலத்தை சேர்ந்தவர்களுக்கு குலதெய்வமாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.