பதிவு செய்த நாள்
16
ஆக
2020
01:08
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கப்படாததால், மாநிலம் முழுதும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் தேக்கமடைந்துள்ளன.
விநாயகர் சதுர்த்தி, வரும் 22ம் தேதி, கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலால், சிலை பிரதிஷ்டைக்கு, அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், தயாராகியுள்ள சிலைகள், தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: மாவட்டத்துக்கு, 2,000 முதல், 10 ஆயிரம் சிலைகள் வரை தயார் செய்யப் பட்டுள்ளன. சிலைகளுக்கு முதலிலேயே பணம் பெற்றுக்கொள்ளும் தயாரிப்பாளர்கள் குறைவுதான். அப்படியே பணம் பெற்றாலும், தயாரிக்கப்பட்ட சிலையை, அடுத்த ஆண்டு பயன்படுத்துவதும் சிரமம். எப்போதும் சிலைகள், அந்தந்த ஆண்டுக்குத் தகுந்தாற்போல், தயாரிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு, கொரோனா அரக்கனை அழிக்கும் நோக்கில், சிலைகளின் வடிவமைப்பில் புதுமைகள் செய்யப்பட்டிருந்தன. மாநிலம் முழுதும், 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்பிலான சிலைகள் தேக்கமடைந்துள்ளன. சிலை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்தான். சிலை பிரதிஷ்டைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -