பதிவு செய்த நாள்
21
ஆக
2020
03:08
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகரை பிரம்மஹத்தி விநாயகர் என்பர். இந்த உலகத்திலேயே கொடிய பாவங்கள் எனக்கருதப்படுபவை பசுவையும், பிராமணர்களையும், சாதுக்களையும் கொலை செய்வது, நம்பிக்கை துரோகம் செய்வது, பெண்களை ஏமாற்றியோ, வலுக்கட்டாயமாகவோ கெடுப்பது ஆகியவை. இந்தச் செயல்களைச் செய்தோருக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் பாவம் தீராது. அவர்களது சந்ததியும் நன்றாக இருக்காது. இத்தகைய கொடிய பாவங்களுக்கும் தீர்வளிக்கிறார் பிரம்மஹத்தி விநாயகர். எங்கள் முன்னோரில் யாரோ செய்த தவறுக்காக எங்களை சோதிக்காதே என இவரிடம் மனமுருகி கேட்டு பிரார்த்திக்கலாம். முன்னோர்களால் பாதிக்கப் பட்ட குடும்பங்களின் வாரிசு இருந்தால் அவர்களுக்கு வேண்டிய உதவி செய்யலாம். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தோஷம் விலகும்.
ஒலி வடிவானவர்: ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.
விநாயகர் சதுர்த்தியை அறிமுகப்படுத்தியவர்: விநாயகர் சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்துவந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பூனாவில் அமைந்துள்ள தகடுசேத் கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா முதன்முதலாக விசேஷமாக கொண்டாடப்பட்டது.
விநாயகரின் பஞ்ச பூதத் தலங்கள்: பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐந்து தலங்களில் எழுந்தருளியுள்ளார் விநாயகர். காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலிலுள்ள விநாயகர் நிலத்தையும், திருவானைக்கா விநாயகர் நீரையும், திருவண்ணாமலை விநாயகர் நெருப்பையும், திருக்காளத்தி பாதாள விநாயகர் வாயுவையும், தில்லை சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் ஆகாயத்தையும் குறிக்கின்றனர். இவர்களை வழிபட ஐம்பூதங்களால் ஏற்படும் அல்லல் விலகும்.