டுண்டி என்ற சொல்லுக்கு தொந்திவயிறு என்று பொருள். காசியில் இருக்கும் விநாயகரை டுண்டி ராஜகணபதி என்பர். வடக்கே டுண்டி என்ற சொல் போல, தெற்கே ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்ற ஊர் இருக்கிறது. இங்கிருக்கும் விநாயகர் ராமரால் வழிபாடு செய்யப்பட்டவர். இலங்கைக்கு தொண்டியிலிருந்து பாலம் கட்ட திட்டமிட்ட ராமர், முதலில் விநாயகரை பூஜித்தார். அவருக்கு காட்சியளித்த விநாயகர் தொண்டியில் இருந்து கட்டாமல் இன்னும் தெற்காக சேதுக்கரையில் கட்டினால் இலங்கை கோட்டையின் வாசலை அடையலாம் என்று யோசனை வழங்கினார். வாழ்வில் வரும் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் வழி காட்டியாக தொண்டிவிநாயகர் இருக்கிறார். வெயில், மழை என பாராமல் மனைவியை தேடி அலைந்து திரிந்த சிரமப்பட்ட மாமாவின்(திருமாலின் அம்சமான ராமர்) மீது கொண்ட அன்பின் காரணமாக, இங்கு விநாயகரும் கூரை இல்லாமல் வெட்டவெளியில் அமர்ந்திருப்பதாக ஐதீகம். இந்த தொண்டிவிநாயகர் மீது ஆதிசங்கரர், கணேச பஞ்ச ரத்தினம் என்னும் பாடலைப் பாடினார்.