நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப் பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள், ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். தற்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு ரிஷபத்திற்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது விருச்சிகத்திற்கும் 2020 செப்.1 ல் பகல் 2:05 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2022 மார்ச் 21 வரை இங்கு தங்கியிருப்பர். பலன் கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அடுத்த ராகு,கேது பெயர்ச்சிக்குள் குருபகவான், சனி பகவான் பெயர்ச்சியாகின்றனர். இதனடிப்படையில் 12 ராசிகளுக்கான பலன், பரிகாரம் இடம் பெற்றுள்ளது.