பதிவு செய்த நாள்
29
ஆக
2020
11:08
திருமலை: திருமலை, திருப்பதி தேவஸ்தான வரலாற்றில், முதன்முறையாக வருடாந்திர பிரம்மோற்சவம் தனிமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். இதையொட்டி ஆகம விதிமுறைகளின்படி, பிரம்மோற்சவ தினங்களில் ஏழுமலையானுக்கு, தினமும் பூஜைகளும், அலங்காரங்களும் செய்விக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் சாமி வீதி உலா நடைபெறும்.
இந்நிலையில், பிரம்மோற்சவம் குறித்து முடிவு செய்ய, திருமலையில் இன்று அங்காவல் குழு கூட்டம் நடந்தது. அதில், இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெறும் எனவும், முதல் பிரம்மோற்சவம் செப்., 19 முதல் 27ம் தேதி வரை நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், எந்த கொண்டாட்டங்களும் இன்றி, தனிமையில், கோவிலுக்குள் விழாவை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது தேவஸ்தான வரலாற்றில் இதுவரை நடைபெறாத நிகழ்வாகும். அக்., மாதம் நவராத்திரி பிரம்மோற்சவடம் நடைபெறும் எனவும், அது மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.