பதிவு செய்த நாள்
30
ஆக
2020
02:08
செங்குன்றம் : ஏரியில், மீனுக்கு வீசிய வலையில், நடராஜர் சிலை சிக்கியது.
சென்னை, செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சி, சிறுகாவூர் ஏரியில், நேற்று காலை, 10:30 மணி அளவில், அதே பகுதி, மல்லிமாநகர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முரளி, 36, என்பவர், மீன் பிடிக்க வலை வீசினார்.அப்போது, கனமான பொருள் வலையில் சிக்கியிருப்பதை கண்டார். அதை தண்ணீருக்கு வெளியே எடுத்தார். பெரிய தோல் பை வந்தது.அதில், ருத்ரதாண்டவம் ஆடும் நடராஜர் சிலை இருந்தது. உடனடியாக, செங்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அந்த சிலை, 1.5 அடி உயரம், 6 கிலோ எடை இருந்தது.போலீசார் மூலம், பொன்னேரி வருவாய்த்துறையிடம், சிலை ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலை, கோவில் அல்லது தொல்லியல் துறை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டதா; சிறுகாவூர் ஏரிக்கு எப்படி வந்தது என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும், தங்க முலாம் பூசப்பட்டிருந்த அந்த சிலை, ஐம்பொன் சிலையா அல்லது உலோகத்தால் செய்யப்பட்டதா என்றும், ஆய்வு செய்யப்படுகிறது.