பதிவு செய்த நாள்
02
செப்
2020
05:09
ஓசூர்: கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வில், தமிழகம் முழுவதும், நேற்று முதல், வழிபாட்டு தலங்களை திறக்க, பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தமிழக அரசு அனுமதி அளித்தது.
ஓசூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில் உட்பட ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்கள் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டன. முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், கோவிலில் ஆங்காங்கு கிருமி நாசினி மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது கோவில் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
* வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து பகுதி கோவில்களும் நேற்று திறக்கப்பட்டன. வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக்கோவில் நேற்று திறக்கப்படவில்லை. இது குறித்து நாராயணி பீடம் மேலாளர் சம்பத் கூறியதாவது: கொரோனா பரவலை தடுக்க, அரசு விதிமுறைகளுடன் முன்னேற்பாடு பணிகள் நிறைய செய்ய வேண்டி உள்ளது. தரிசன அனுமதியில் மாறுதல்கள் செய்ய வேண்டி உள்ளதால், கோவில் திறக்க சில நாட்களாகும். முறையான அறிவிப்பு வந்ததும் பக்தர்கள் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
* அரூரிலுள்ள ஸ்ரீவாணீஸ்வரர் கோவில், பழையப்பேட்டை கரிய பெருமாள் கோவில் பல கோவில்கள் திறக்கப்பட்டன. ஐந்து மாதங்களுக்கு பின், கோவில்கள் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.