பதிவு செய்த நாள்
19
மே
2012
10:05
சபரிமலை: வைகாசி மாத பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்றிரவு அடைக்கப்படும். தொடர்ந்து, பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, வரும் 30ம் தேதி நடை திறக்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜை, சிறப்பு பூஜை, உற்சவம் ஆகியவற்றிற்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், வைகாசி மாத பூஜைகளுக்காக, 14ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் வேறு பூஜைகள் ஏதும் நடைபெற வில்லை. மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு பூஜைகளாக, சகஸ்ர கலசாபிஷேகம், சந்தன அபிஷேகம், உதயாஸ்தமன மற்றும் படி பூஜைகள், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடத்தப்பட்டன. மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, இன்றிரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி, நடை அடைக்கப்படும். தொடர்ந்து, சபரிமலையில் அய்யப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்த தினத்தை ஒட்டி, வரும் 30ம் தேதி, நடை மீண்டும் திறக்கப்படும். அதற்கடுத்த நாள் (31ம் தேதி) பிரதிஷ்டா தின சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையடுத்து, அன்றைய தினம் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.