நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திறப்பு: சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்
பதிவு செய்த நாள்
02
செப் 2020 05:09
நாமக்கல்: நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் திறக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால், மார்ச், 20 முதல், அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. ஆகஸ்ட் துவக்கத்தில் நாமக்கல் நரசிம்மர் கோவிலை திறக்க மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. ஆனால், ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில் திறக்கப்படவில்லை. இந்நிலையில், செப்.,1 முதல் அனைத்து கோவில்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்டு, 80க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. ஐந்து மாதங்களுக்கு பின் இக்கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக கிருமி நாசினி வழங்கும் தானியங்கி இயந்திரம் நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டிருந்தது. மேலும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் வட்டமிடப்பட்டிருந்தன. நேற்று, தங்க கவசம் சாற்றப்பட்டு ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். வெளி மாவட்ட பஸ்கள் இல்லாததால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. அர்ச்சனை செய்வதற்கும், பூ, பழங்கள், மாலைகள் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 160 நாள்களுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர், அரங்கநாதர், நரசிம்மர் கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்களும், பொதுமக்களும், மகிழ்ச்சியடைந்தனர்.
|