பதிவு செய்த நாள்
03
செப்
2020
01:09
மேல்மருவத்துார்,மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், உலக நன்மைக்காக, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துாரில், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது.இங்கு, கொரோனா ஊரடங்கு வேளையிலும், தினசரி வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிலில் பக்தர்களை அனுமதிக்க, அரசு உத்தரவிட்டதை அடுத்து, பங்காரு அடிகளார் ஆசியுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று முன்தினம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, முக கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி, உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பின், கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின், மாலை, 6:30 மணிக்கு, பவுர்ணமி பூஜையுடன், கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் விலகி, மக்கள் நலம் பெற வேண்டி, பெண் பக்தர்கள் சார்பில் கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது.உலக நன்மை வேண்டி சங்கல்பம், ஆதிபராசக்தி அம்மனை போற்றி மந்திரங்கள் படிக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.அனைத்து ஏற்பாடுகளையும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் செய்தனர்.