பதிவு செய்த நாள்
07
செப்
2020
11:09
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் வரும், 17ம் தேதிக்கு பின் துவக்கப்படும் என, கோவிலை கட்டும், ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
பூமி பூஜை: இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்து, தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ராமர் கோவில் கட்ட, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளையை, மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அமைத்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, கடந்த மாதம், 5ம் தேதி நடந்தது. பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று, கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்நிலையில், அயோத்தியில், அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் கூறியதாவது:மஹாளய பட்சம் எனப்படும் முன்னோரை வழிபடுவதற்கான, 15 நாட்கள் வரும், 17ம் தேதியுடன் முடிகிறது.
இதன்பின், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கும். கட்டுமான பணிகளை, நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான, எல் அண்டு டி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 12 ஆயிரத்து, 879 சதுர மீட்டரில், ராமர் கோவில் அமைய உள்ளது. 1,200 துாண்கள் கட்டப்பட உள்ளன. இந்த துாண்களின் அஸ்திவாரம், 100 அடிக்கும் அதிகமான ஆழத்தில் அமைக்கப்படும். இந்த துாண்கள் அனைத்தும் கற்களால் கட்டப்படும். இரும்புகள் பயன்படுத்தப்படாது.
ஒப்பந்த அடிப்படை: மேலும், கான்கிரீட் பணிகளுக்காக, மிகப்பெரிய கான்கிரீட் இயந்திரம், அயோத்திக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.கோவில் அமையும் வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டுமானங்களை இடித்து, அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. கட்டுமான பணிக்காக, நாடு முழுவதிலும் இருந்து, பல்வேறு ஏஜென்சிகள் வழியாக, தொழிலாளர்களை, ஒப்பந்த அடிப்படையில், எல் அண்டு டி நிறுவனம் நியமித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.