பதிவு செய்த நாள்
15
செப்
2020
02:09
அரையர் சேவை எனப்படும், பக்தி நடனத்தை ஆய்வு செய்து வருவது பற்றி, பழம்பெரும் இசைக்கலைஞர், பத்மபூஷண் மதுரை என்.கிருஷ்ணன் பேத்தி சுதாலட்சுமி: பரத கலையை உயிர்மூச்சாக பயின்று வரும் நான், ஸ்ரீகிருஷ்ண சிலம்பம் எனும் பெயரில் மயிலாப்பூரில் நடனப்பள்ளி யும் நடத்தி வருகிறேன்.
தமிழகத்தின் பாரம்பர்யக் கலைகளில் ஆய்வு செய்ய விரும்பி, பெருமாளுக்குக் கைங்கர்யமாகச் சமர்ப்பிக்கப்படும் அரையர் சேவை கலை குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசின் கீழ் இயங்கும், கலாசார மையத்தில் விண்ணப்பித்தேன். ஆய்வுக்குரிய களமாக அதை கலாசார மையம் அங்கீகரிக்க, தற்போது அந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். அபிநயத்துடனும் தாள ஒலிகளுடனும் திவ்ய பிரபந்தங்களைப் பாடி ஆடுவதே அரையர் சேவை. அரையர் என்பவர், கோவில் மூலவருக்கான பலவித சேவைகளில் தினசரி ஈடுபடுவார். எனினும், பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப்பூரம் உள்ளிட்ட முக்கிய நாட்களில், இறைவன் முன், அரையர் சேவை நிகழ்த்துவர். அரையர் சேவையில் ஈடுபடுவோர், பஞ்சகச்சம் அணிந்திருப்பர்.
அரையர் குல்லாய் அல்லது சிகாமணி எனப்படும் தலைப்பாகை, இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலை ஆகியவற்றுடன் வைணவச் சின்னங்களையும் அணிந்திருப்பர். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். சங்கு, சக்கரம், நாமம் ஆகிய சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். கைகளில் குழித்தளம் எனப்படும் தாளத்தை இசைத்தபடி பாடுவர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். அதற்குக் கர்ணபத்ரம் என்று பெயர். சேவை தொடங்குவதற்கு முன்பாக பெருமாளுக்குச் சூட்டிய மாலை, சுருளமுது வழங்கி பரிவட்டம் கட்டி, அரையர்களுக்கு மரியாதை செய்யப்படும்.நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகளால், 1,000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவை தொடங்கப்பட்டது.
மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் ஆகிய தன் இரண்டு மருமகன் களுக்கும், நாலாயிர பிரபந்தங்களைப் பண் மற்றும் தாளத்துடன் நாதமுனிகள் கற்பித்ததாகவும், அவர்களின் வழி வந்தவர்களும் அவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள்.முதன் முதலில் இச்சேவை, ஸ்ரீரங்கத்தில் தொடங்கப் பட்டது. பின், ஸ்ரீவில்லிபுத்துார், ஆழ்வார் திருநகரி, மேல்கோட்டை ஆகிய தலங்களிலும் அரையர் சேவை நடைபெற்று வருகிறது.உற்சவருக்கு முன்பாக நிகழ்த்தப்படும் இந்த சேவை, பிரபந்தத்தைப் பாடுவது; பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது; பிரபந்தத்தின் உட்பொருளை விளக்கிக் கூறுவது ஆகிய மூன்று அம்சங்களை கொண்டிருக்கும். ஒருவகையில், அரையர் சேவையை முத்தமிழ்க் கலை என்றே சொல்லலாம்!