பதிவு செய்த நாள்
16
செப்
2020
06:09
அயோத்தி: அயோத்தியில் அடுத்த மாதம் நவராத்திரி விழாவை, வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. தென் மாநிலங்களில் நவராத்திரி விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகை, வட மாநிலங்களில் ராம் லீலா என்ற பெயரில் நடைபெறும். 10வது நாளான விஜயதசமி, தசரா பண்டிகையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு அயோத்தியில் ராம் லீலா அக்., 17 - 25 வரை சரயு ஆற்றங்கரையில் லட்சுமன் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் நாடகமாக அரங்கேற்றப்படும். அதில், அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
கவிதா ஜோஷி என்பவர் சீதையாகவும், சோனு சாகர் ராமனாகவும் நடிக்க உள்ளனர். போஜ்புரி நடிகரும், கோரக்பூர் பா.ஜ., - எம்.பி.,யுமான ரவி கிஷன் ராமனின் தம்பியான பரதன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வட கிழக்கு டில்லியின் பா.ஜ., - எம்.பி., மனோஜ் திவாரி கிஷ்கிந்தை மன்னரின் மகன் அங்கத் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த ஆண்டு ராம் லீலா நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்தாண்டு அக்டோபருக்குள் கொரோனா தொற்று குறைந்தால் பொதுமக்கள் முன்னிலையில் நாடகம் அரங்கேற்றப்படும். இல்லையெனில் பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும், டிடி மற்றும் பிற சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்படும் என உ.பி., அரசு தெரிவித்துள்ளது.