திருப்பதி : வரும் 19ம் தேதி துவங்க இருக்கும் திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு கோவிலை சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்வு நடைபெற்றது.
திருமலையில் நடைபெறும் திருவிழாக்களிலேயே பிரம்மாண்டமானதும் பிரபலமானதுமான விழா பிரம்மோற்சவ விழாவாகும்.பிரம்மோற்சவ விழா வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு முறை நடைபெறும்.இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவ விழாவாகும்.முதல் பிரம்மோற்சவ விழா இந்த மாதம் 19ந்தேதி துவங்கி 27 ந்தேதி வரை நடைபெறும். இரண்டாவது நவராத்திரி பிரம்மோற்சவம் அடுத்து வரும் அக்டோபர் மாதம் 16ந் தேதி துவங்கி 24 ந்தேதி வரை நடைபெறும்.
19ம் தேதி துவங்க இருக்கின்ற முதல் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு கோவிலை பாரம்பரிய முறையில் சந்தனம் ஜவ்வாது உள்ளீட்ட வாசனைப் பொருட்களால் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வு இன்று நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் ஒன்பது நாட்களிலும் சீனிவாசப்பெருமாள் சர்வ அலங்காரத்தில் விதவிதமான நகைகள் அணிந்து மாடவீதிகளில் வலம் வருவார் பக்தர்கள் தரிசிப்பர். இந்த வருடம் கொரோனா காரணமாக கோவிலுக்குள்ளேயே பிரம்மோற்சவ விழாவினை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் யாரும் பார்க்கவோ பங்கேற்கவோ முடியாது கோவிலின் அதிகாரபூர்வமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் (எஸ்விபிசி) நேரலையில் அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும்.