பதிவு செய்த நாள்
17
செப்
2020
04:09
தஞ்சாவூர், தஞ்சை அருகே கி.பி.,10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து துவாரபாலகர் சிற்பம் மற்றும் லிங்கத் திருமேனி ஒன்றும் வரலாற்று ஆய்வாளர்களாக கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று மற்றும் சுவடியியல் ஆய்வாளரான மணிமாறனுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அடுத்த நந்தவனப்பட்டி கிராமத்தை சேர்ந்த காமராஜர் என்பவர் வயலை உழுத போது, சிலைகள் காணப்பட்டுள்ளன.
அவரின் தகவலின் பெயரில், மணிமாறன் தலைமையிலான குழுவினர், அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து வரலாற்று ஆய்வாளர் மணிமாறன் கூறியதாவது: வயலில் ஆய்வின் போது, லிங்கத் திருமேனி ஆவுடையின்றி மண்ணிற்கு மேலாக இரண்டரை அடி உயரத்தில் காணப்பட்டது. லிங்கம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 15 அடி தொலைவில், புதைந்த நிலையில், ஒரு துவார பாலகர் சிற்பமும் காணப்பட்டன. சுமார் ஐந்தடி உயரம் கொண்ட, துவாரபாலகர் சிற்பம் சோழர் காலத்து கலை அழகோடு காட்சியளித்து. இச்சிற்பத்தின் கை மற்றும் கால்கள் உடைந்த நிலையில் காணப்பட்டன. இருப்பினும், முகம் மிக அழகுடன் கோரைப் பற்களைக் காட்டி சிரித்தவாறு இருந்தன. இவை கி.பி.,10ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. மேலும், இங்குள்ள வயல்வெளிப் பகுதியில் அகழாய்வு செய்தால் பல சிற்பங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் கருவறையின் முன்புற வாயில் கதவருகே துவாரபாலகர் சிற்பம் அமைத்திருப்பது மரபாகும். இங்கு ஒரு துவாரபாலகர் மட்டுமே புதைந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மற்றொரு துவாரபாலகர் சிற்பம், லிங்கத்தின் ஆவுடைப்பகுதி இன்னும் பல சிற்பங்கள் எங்கேனும் புதைந்திருக்கலாம் அல்லது கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். இங்கு கோயில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் அறிய முடியாத அளவிற்கு காலம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இந்த இடத்தில் ஒரு பெரிய சிவாலயம் இருந்திருக்கலாம் என்றார்.