பதிவு செய்த நாள்
18
செப்
2020
09:09
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.
இரவு 7 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. கோவில் பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 8 மணிக்கு மகா தீபாராதனையுடன் உற்சவம் நிறைவடைந்தது. இதில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில் குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில் 300க்கும மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக 7 வது மாதமாக வழக்கமான ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவம் நடத்தாமல் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் வளாகத்தில் நடந்தது.
பக்தர்கள் நிறுத்தம்: அமாவசையின் போது பல லட்சம் பேர் குவிவார்கள் என்பதால் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தடை விதித்து இருந்தார். நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு செய்து கோவில்களில் வழிபாடு துவங்கி விட்டதால் மேல்மலையனூரில் தரிசனம் இருக்கும் என சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கள்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பேர் வேன் கார்களில் வந்தனர். இவர்கள் அனைவரையும் போலீ சார் செஞ்சி, வளத்தி மற்றும் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதையும் மீறி ஆயிரக்கணக்கானவர்கள் பல கி.மீ., தூரம் நடந்து மேல்மலையனூர் வந்தனர். அவர்களையும் கோவில் அருகே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.