பதிவு செய்த நாள்
18
செப்
2020
04:09
கரூர்: புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு, நெரூர் காவிரி ஆற்றில், ஏராளமானோர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தட்சிணாயன புண்ணிய காலத்தில், மகாளய பட்ச புண்ணியகாலம் கடந்த, 2ல் துவங்கி, நேற்று மகாளய அமாவாசையோடு முடிவடைந்தது. இந்த, 15 நாட்களும், மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவர் என்பது நம்பிக்கை. எனவே, மகாளய அமாவாசையன்று பித்ரு வழிபாடு செய்வது சிறப்பாகும். இருந்துபோதும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்ட போது, பல்வேறு மாவட்டங்களில் கடல், ஆற்றங்கரைகளில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கவில்லை. ஆனால், கரூர் மாவட்டத்தில் எந்தவித தடையும் மாவட்ட நிர்வாகம் விதிக்கவில்லை. இதனால், வேலாயுதம்பாளையம் மற்றும் நெரூர் காவிரி ஆற்றில், ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட்டனர். இதற்காக, நெரூர் காவிரியாற்றில், 1,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். தர்ப்பணம் கொடுத்த பின், அருகிலுள்ள பிரமேந்திராள் அதிஷ்டானத்திற்கு சென்று வழிபட்டனர்.
* குளித்தலை, கடம்பந்துறை காவிரியாற்றில், ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு படையலிட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஓத முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையை கொடுத்து, கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர்.