திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியறே்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2020 12:09
திருப்பதி: திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி புறப்பாடு செய்தார்.திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தன்று தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று முதல் வருடாந்திர பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை முன்னிட்டு கோவில் வண்ண மலர்கள், மின் விளக்குகள், மாவிலை தோரணங்கள், வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்டது.
பிரம்மோற்ஸவம் இந்தாண்டு கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினர். மாலை 5:௦௦ மணிக்கு கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளிட்டவற்றுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.பின் கொடிமரம் தர்பை புற்களால் நெய்யப்பட்டு மாவிலை கட்டப்பட்டு திருமண் அணிவிக்கப்பட்டது. இரவு 8:30 முதல் 9:30 மணிவரை பிரம்மோற்ஸவத்தின் முதல் வாகனமான பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தன் உபய நாச்சியார்களுடன் கல்யாண உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் தேவஸ்தான அதிகாரிகள் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர்.
திருமலையில் பெருமாளை பார்க்க பிரம்மோற்சவ நாளில் எண்பது ஆயிரம் பேர்களில் இருந்து ஒரு லட்சம் பேர் வரை வருவர் ஆனால் இப்போது பதிமூன்றாயிரம் பேர்களுக்கு மட்டுமே முன்னுாறு ரூபாய் டிக்கெட் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது இலவச தரிசனம் கிடையாது ஆகவே ஆன்லைனில் டிக்கெட் எடுத்து வருபவர்கள் நெரிசல் இல்லாமல் பெருமாளை தரிசிக்கின்றனர். இந்த விவரம் எதுவும் தெரியாமல் மலைக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படுகின்றனர். பிரம்மோற்சவ விழா நாளில் விதவிதமான வாகனங்களில் வரும் மலையப்பசுவாமியை கோவிலின் அதிகாரபூர்வமான எஸ்விபிசி சேனலில் மட்டுமே நேரலையில் காணலாம். -எல்.முருகராஜ்.