பதிவு செய்த நாள்
20
செப்
2020
03:09
கிருஷ்ணகிரி: புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து, சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையில், அனைத்து பெருமாள் கோவில்களிலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள கணவாய்ப்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோவில் மற்றும் பாலேகுளி பெரியமலை அனுமந்தராய சுவாமி கோவிலில், பக்தர்கள் திரள்வதை தடுக்க, சனிக்கிழமை தரிசனத்துக்கு, 1,200 பேர் மட்டுமே டோக்கன் முறையில் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இதன்படி டோக்கன் பெற்ற பக்தர்கள், சனிக்கிழமையான நேற்று அதிகாலை, 5:00 முதல், இரவு, 8:00 மணி வரை, டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்திருந்த பக்தர்கள், சமூக இடைவெளியை மறந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இது தவிர, தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில், அலசநத்தம் வெங்கடேஷ் நகர் வெங்கட்ரமண சுவாமி கோவில், மதகொண்டப்பள்ளி பாஸ்கர வெங்கட்ரமண சுவாமி கோவில், குடிசெட்லு திம்மராய சுவாமி கோவில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில், ஓசூர் நேதாஜி ரோடு நகரேஸ்வரர் கோவில், வேலம்பட்டி அருகே உள்ள பெரியமலை கோவில், மற்றும் 50 அடி உயர மலை உச்சியில் உள்ள ஐகொந்தம்கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாள் கோவில், சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி கோவிலில், பக்தர்கள் டோக்கன் முறை இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பு அபிஷேகம்: தர்மபுரி அடுத்த செல்லியம்பட்டி பெருமாள் கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தன. இதேபோல், தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. செட்டிக்கரை ஸ்ரீபெருமாள் கோவில், அதகபாடி லஷ்மிநாராயண சுவாமி கோவில், தொப்பூர் வீர ஆஞ்சநேயர் கோவில், இலக்கியம்பட்டி நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்பட, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
* தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டியில் உள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமண சுவாமி, அரூர், பழையபேட்டை கரிய பெருமாள், மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோவில் ஆகியவற்றில், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* வேலூரில் உள்ள திருமலை - திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில், வெங்கடேச பெருமாள் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மஹா சுதர்சன ஹோமம்: ராணிப்பேட்டை மாவட் டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று காலை, 6:30 மணி முதல் தொடர்ந்து கோ பூஜை, தன்வந்திரி பெருமாளுக்கு மஹா சுதர்சன ஹோமம், கூட்டுப்பிரார்த்தனை, சஹஸ்ரநாம அர்ச்சனை, மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 108 நெய் தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தன்வந்திரி பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.