பதிவு செய்த நாள்
20
செப்
2020
03:09
கரூர்: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், பக்தர்கள் குவிந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வரும், 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த, 1 முதல், வழிபாட்டு தலங்களில், பொதுமக்கள் வழிபாடு நடத்தி கொள்ள, பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், நடப்பாண்டு புரட்டாசி திருவிழா மற்றும் தேர்த்திருவிழா நடக்குமா, என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, புரட்டாசி திருவிழா மட்டும் நடத்த, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று, முதல் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, அதிகாலை முதல், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்களுக்கு, ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. கிருமி நாசினி மூலம் பக்தர்கள், கைகளை கழுவி கொள்ளவும், முக கவசம் அணிந்து கொண்டுதான் வர வேண்டும் எனவும், கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த ராம ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிகளுக்கு சிறப்பு அபி?ஷகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.