பதிவு செய்த நாள்
20
செப்
2020
03:09
சேலம்: புரட்டாசி முதல் சனியையொட்டி, பெருமாள் கோவில்களில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனியான நேற்று, சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் நடை, காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவர், உற்சவருக்கு, சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. இதையடுத்து, மூலவர் முத்தங்கி அலங்காரத்திலும், உற்சவர் ராஜ அலங்காரத்திலும் காட்சியளித்தனர். பக்தர்கள் குடும்பத்துடன், நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். ஜாகீர் அம்மாபாளையம், ஆஞ்சநேயர் ஆசிரமத்தில், சுவாமிக்கு அபி?ஷகம் செய்து, மூலவர், முத்தங்கி கோலத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள், கோவிந்தா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட், அஷ்டலட்சுமி சமேத லட்சுமிநாராயணர் கோவிலில், மூலவர் தங்க கவசத்தில் ஜொலித்தார். நெத்திமேடு கரிய பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சேலத்தில், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள், நரசோதிப்பட்டி சென்றாய பெருமாள், உடையாப்பட்டி கோவிந்தராச பெருமாள், நாமமலை சீனிவாச பெருமாள், இரண்டாவது அக்ரஹாரம், லட்சுமிநாராயணர் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், பெத்தநாயக்கன்பாளையம் கொப்பு கொண்ட பெருமாள், சங்ககிரி ஒருக்காமலை, வரதராஜ பெருமாள், காருவள்ளி வெங்கட்ரமணர், நங்கவள்ளி, நரசிம்மர், பாலமலை சித்தேஸ்வரர் உள்பட மாவட்டம் முழுதும், பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்ப அபி?ஷகத்தில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
குழந்தைகளுக்கு அனுமதியில்லை: பெத்தநாயக்கன்பாளையம், கொப்பு கொண்ட பெருமாள் கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்துவர வேண்டும். பூஜையின்போது, பக்தர்களுக்கு அனுமதியில்லை. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின், பக்தர் அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளியுடன் தரிசிக்க, 10 வயது முதல், 60 வயது வரையுள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். குழந்தைகள், சர்க்கரை, இருதய நோயாளிக்கு அனுமதியில்லை. சளி, காய்ச்சல், இருமல் பாதித்தோர் வரவேண்டாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அலுவலருக்கு எச்சரிக்கை: கோவில்களில், கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிந்து, கிருமி நாசினி உபயோகப்படுத்தி, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தேங்காய் உடைக்க, அர்ச்சனை செய்ய, தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, சேலம் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் கூறுகையில், கோவிலில் தரிசனம் செய்வதற்கான உரிய வழிமுறை பின்பற்றுவதை கண்காணிக்க, 3 உதவி ஆணையர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறை கடைப்பிடிக்காத கோவில் அலுவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.