பதிவு செய்த நாள்
21
செப்
2020
12:09
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, ஏரியில் வைத்து கிராம தேவதைகளுக்கு மக்கள் பூஜை நடத்தி வழிபட்டனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்த நாகமங்கலத்தில், 115 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது. கடந்த, 15 ஆண்டுகளாக மழையின்றி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் வறண்டுள்ளது. இந்த ஏரி மூலமாக, நாகமங்கலம், அயர்னப்பள்ளி, ஊடேதுர்க்கம் ஆகிய பஞ்.,க்களில் உள்ள மொத்தம், 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்து வந்தன. நாகமங்கலம், ஏரி நிரம்பாமல் உள்ளதால், விவசாயம் மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு தொழில் கூட பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து ஏரி நிரம்பி, விவசாயம் செழிக்க வேண்டி, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கிராம தேவதைகளை வைத்து, சிறப்பு பூஜை நடத்தினர். இதில், மக்கள் தங்களது உடலில் சாட்டையால் அடித்து கொண்டு, வேண்டுதல்களை நிறைவேற்றினர். முன்னதாக, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, எல்லம்மா, கங்கம்மா, செல்லபுரியம்மா, புட்டுமாரியம்மா, பைரேஷ்வரா, திம்ம ராயசுவாமி, முத்தப்பா, பீரப்பா, வெங்கடரமணசுவாமி ஆகிய கிராம தேவதைகள், மேள, தாளங்கள் முழங்க ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என, கிராம மக்கள் வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.