பதிவு செய்த நாள்
21
செப்
2020
12:09
லக்னோ : அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதி, வழக்கமான வடிவத்தில் இல்லாமல், வித்தியாசமானதாக இருக்கும் என, அதை கட்ட உள்ள, அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட அனுமதியளித்த உச்ச நீதிமன்றம், மசூதி கட்ட, அயோத்தியில் முக்கியமான இடத்தில், 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது. இதையடுத்து, அயோத்தி அருகே தானிப்பூர் கிராமத்தில், 5 ஏக்கர் நிலத்தை, மாநில சன்னி வக்பு வாரியத்திடம், உ.பி., அரசு வழங்கியுள்ளது. இந்த நிலத்தில், மசூதி கட்டுவதற்காக, இந்தோ இஸ்லாமிக் கலாசார பவுண்டேஷன் என்ற பெயரில், அறக்கட்டளை ஒன்றை, சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ளது. ஐந்து ஏக்கர் நிலத்தில், மசூதி மட்டுமின்றி, இஸ்லாமிய ஆய்வு மையம், நுாலகம், மருத்துவமனை, அருங்காட்சியகம் ஆகியவற்றை கட்டவும், அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தோ இஸ்லாமிக் கலாசார பவுண்டேஷனின் செயலர் அதார் உசேன் கூறியதாவது: ஐந்து ஏக்கர் நிலத்தில், 15 ஆயிரம் சதுர அடியில் மசூதி கட்டப்படும். இடிக்கப்பட்ட பாபர் மசூதி எந்த அளவில் இருந்ததோ, அதே அளவில் இந்த மசூதி கட்டப்படும். எனினும், இந்த மசூதி வழக்கமான வடிவத்தில் இருக்காது. மெக்காவில் உள்ள காபா ஷெரீப் போல், சதுர வடிவில் கட்டப்படும். மேலும், இந்த மசூதிக்கு, பாபர் மசூதி என பெயர் வைக்கப்படமாட்டாது. தானிப்பூர் மசூதி என அழைக்கவே, நாங்கள் விரும்புகிறோம். மசூதி கட்டுவதற்கு மக்கள் நிதியளிக்க வசதியாக, இணையதளம் துவக்கப்பட உள்ளது. இதில், முஸ்லிம் அறிஞர்களின் கட்டுரைகள் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.