புரட்டாசி சனிக்கிழமைகளில் பெண்கள் யாசகம் கேட்டு செல்லலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2020 06:09
ஒரு தீவிர பக்தர் இருந்தார். புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்குத் திருவமுது படைத்து ஏழைகளுக்கு விநியோகம் செய்து வந்தார். தாம் மிகப் பெரிய தர்மம் செய்வதாக அவருக்கு கர்வம் ஏற்பட்டது. பகவானின் சோதனையும் துவங்கியது. ஒரு சமயத்தில் திருவமுது செய்வதற்கான வசதியே இல்லாத சூழல், கர்வம் இருந்தாலும் பக்தர் அல்லவா? புரட்டாசி சனியன்று, அரிசி மற்றும் பொருட்களை மற்றவர்களிடம் உதவி கேட்டு வாங்கி திருவமுது செய்து பெருமாளுக்குப் படைத்து வழக்கம் போல் விநியோகம் செய்தார். பகவானே நேரில் காட்சி கொடுத்து திருவமுதை வாங்கி உண்டார். மெய் சிலிர்த்து கண்கலங்கிய பக்தர் இத்தனை நாள் வாராது, இன்று யாசகம் வாங்கி அமுது செய்திருக்கும் நாளில் காட்சியளித்து அமுது உண்ணும் காரணம் யாது பரந்தாமா? என்று கேட்டார். இத்தனை நாள் உன்னுடையது எனும் எண்ணத்துடன் அமுது படைத்தாய். அதில் உன் கர்வம் கலந்திருந்தது. இன்று பலரிடம் பெற்று செய்திருக்கிறாய். உனது கர்வம் கலக்காததால் மிக்க சுவையாக உள்ளது. உனக்கும் உனது தர்மத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் இன்று மகிழ்ச்சியோடு அருள்பாலிக்கிறேன். தர்மம் பொதுவானது, என்றார். பக்தரும் மகிழ்ந்து புரட்டாசி சனிக்கிழமை தோறும் யாசகம் பெற்று திருவமுதும் அன்னதானமும் செய்து மகிழ்வுடன் வாழ்ந்தார். இதன் காரணமாகத்தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் யாசகம் பெற்று திருவமுது செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. மேலான தர்ம காரியத்தில் ஆண் பெண் வித்தியாசமெல்லாம் கிடையாது.