தஞ்சாவூர்: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்திருப்பது குறித்து, தஞ்சை பெரிய கோவிலில் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உலக சுற்றுலா தினமான நேற்று, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள், 30 பேர் பங்கேற்று இசை நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆயக்கலை நிகழ்ச்சிகள் நடந்தன.