கண்டாச்சிபுரம்; ஒடுவன்குப்பம், மேல்காரணை கிராமங்களில் இருந்து ஆதிதிருவரங்கத்திற்கு பக்தர்கள் நடைபயணம் சென்றனர்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து மணலுார்பேட்டை அடுத்த ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். கண்டாச்சிபுரம் வழியாக நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடிச் சென்றனர். நேற்று மேல்காரணை, ஒடுவன்குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து மூன்று குழுக்களாக பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.மேல்காரணை வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்கொண்ட பக்தர்கள் 5ம் ஆண்டு நடைபயணத்தை தொடங்கினர்.இதேபோன்று ஒடுவன்குப்பம் லட்சுநாராயண சுவாமிகள் பஜனைக்குழுவைச் சேர்ந்த 250 பக்தர்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்து மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்தனர்.இவர்கள் நேற்று காலை லட்சுமி நாராயண சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனைகளைச் செய்து பயணத்தைத் தொடங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை மேல்காரணை வரதராஜப்பெருமாள் மற்றும் ஒடுவன்குப்பம் லட்சுமி நாராயண சுவாமிகள் பஜனைக் குழுக்களைச் சேர்ந்த பக்தர்கள் செய்தனர்.