திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நவராத்திரி விழா கொலு வைப்பதற்காக பொம்மை விற்பனை துவங்கப் பட்டுள்ளது. நவராத்திரி விழா என்றாலே பெரும்பாலான வீடுகளில் கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இதற்காக ஆண்டு தோறும் விதவிதமான கொலு பொம்மைகளை கைவினை கலைஞர்கள் தயாரித்து விற்பனைக்குவைப்பது வழக்கம்.
அந்தவகையில் திருக்கோவிலூரில் பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையத்தை சேர்ந்த பொம்மை தயாரிப்பாளர்கள் பாரம்பரியமாக மண்ணால் செய்யப்பட்ட அஷ்டலட்சுமி செட், வளைகாப்பு செட், கல்யாணசெட், இது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலை பாதிக்காத பேப்பர் கூழால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. செட் பொம்மைகள் ஆயிரம் ரூபாயிலிருந்து, ஆயிரத்து 700 ரூபாய் வரையும், தனித்தனி பொம்மைகள் உயரத்திற்கு தகுந்த வகையில், ரூ.100 முதல், 700 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. நவராத்திரி விழாவிற்கு இன்னும் 10நாட்கள் உள்ளது. சன்னதி வீதியில் சாலையோரம் கடை வைத்திருக்கும் ஏரிப்பாளையத்தை சேர்ந்த மோகன், 37; கூறியதாவது: வழக்கமாக திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நவராத்திரி பொம்மை விற்பனை செய்வது வழக்கம். ஆனா ல் இந்த ஆண்டு திருக்கோவிலூரில் முதல் முறையாக கடை வைத்துள்ளேன். காரணம் கொரோனா அச்சம் காரணமாக விற்பனை எப்படி இருக்கும் என தெரியாத நிலையில், அருகிலிருக்கும் திருக்கோவிலூருக்கு வந்துள்ளோம். இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களும் பொம்மையை வாங்கிச்செல்கின்றனர். வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கக்கூடும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.