பதிவு செய்த நாள்
11
அக்
2020
04:10
ஓசூர்: புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய, ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
தமிழகத்தில் புரட்டாசி மாதம் கடந்த, 17ல் துவங்கியது. நான்காவது சனிக்கிழமையான நேற்று, கிருஷ்ணகிரி அருகே உள்ள கணவாய்ப்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோவில் மற்றும் பாலேகுளி பெரியமலை அனுமந்தராய சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கொரோனாவால், டோக்கன் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், 50 அடி உயர மலை உச்சியில் உள்ள ஐகொந்தம் கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாள் கோவிலில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருஷ்ணகிரி, காட்டுவீர ஆஞ்நேயர் கோவிலில் உள்ள வெங்கடேஷ பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதுதவிர, தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில், அலசநத்தம் வெங்கடேஷ் நகர் வெங்கட்ரமண சுவாமி கோவில், மதகொண்டப்பள்ளி பாஸ்கர வெங்கட்ரமண சுவாமி கோவில், குடிசெட்லு திம்மராய சுவாமி கோவில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில், ஓசூர் நேதாஜி ரோடு நகரேஸ்வரர் கோவில், வேலம்பட்டி அருகே உள்ள பெரியமலை கோவில், சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி திம்மராய சுவாமி கோவிலில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று திரண்டனர்.
* தர்மபுரி, கடைவீதி பிரசன்னவெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, 16 வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெருமாள் உற்சவருக்கு, ஆண்டாள் உணவளிப்பது போன்றும், பத்மாவதி தாயார் விசிறி விடுவது போன்றும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவலால், அபிஷேக பூஜையில், பக்தர்கள் சிலர் மட்டுமே பங்கேற்றனர். இதேபோல், தர்மபுரி அடுத்த, செல்லியம்பட்டி பெருமாள் கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் கோவில், செட்டிக்கரை ஸ்ரீபெருமாள் கோவில், அதகபாடி லஷ்மிநாராயண சுவாமி கோவில், இலக்கியம்பட்டி நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்பட, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில், சுவாமிக்கு நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
* அரூர், பழையபேட்டை கரிய பெருமாள் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோவில், எம்.வெளாம்பட்டியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண கோவில் உள்ளிட்டவற்றில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.