திருநெல்வேலி : திம்மராஜபுரம் வெங்கடாசலபதி கோயில் நிலத்தை மீட்க வேண்டும், என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி, திம்மராஜபுரத்தில் அறநிலையத்துறையின் வெங்கடாசலபதி கோயிலுக்கு சொந்தமான நிலம் 1965ல் தரைவாடகைக்கு விடப்பட்டுள்ளது.அதனை பயன்படுத்துவோருக்கு நிலப்பட்டா வழங்க தி.மு.க., ம.தி.மு.க.,உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு திருநெல்வேலி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆறுமுக கனி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கோயிலுக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தில் போலீஸ் குடியிருப்பு, மின்வாரியம், குடிநீர்வடிகால் வாரியம் ஆகிய துறைகளுக்கு 45 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலத்தில் பலரும் வீடு கட்டியுள்ளனர்.
அறநிலையத்துறை கோயில்களுக்கு வருமானம் இல்லாத சூழலில் இந்த நிலங்களை மீட்கவேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட போலி பட்டாக்களை ரத்து செய்யவேண்டும். அரசுக்கு வழங்கிய நிலங்களையும் தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். அத்தகைய பத்திர பதிவுகளையும் ரத்துசெய்ய வேண்டும்.இதுதொடர்பாக அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம், என்றார்.