பதிவு செய்த நாள்
14
அக்
2020
10:10
கோவை: நவராத்திரி என்றாலே, நினைவுக்கு வருவது கொலு. ஒன்பது படிக்கட்டுகள் அமைத்து, மண் பொம்மைகள் காட்சிப்படுத்தி வழிபடுவது, பெண்கள் வழக்கம். அவர்களை ஈர்க்கும் வகையில், புது மாடல்களில் எண்ணற்ற பொம்மைகள், சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.நம் தேசத்தில், நவராத்திரி விழாவில், பெண் தெய்வங்களை போற்றி வணங்குவது வழக்கம்.
ஒன்பது படிக்கட்டுகளில் கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தி, ஒன்பது நாட்களும், இறைவனை நினைத்து வழிபாடு செய்யப்படும்.முதல் படியில் ஓரறிவு உயிரினங்களில் துவங்கி, இரண்டாம் படியில் ஈரறிவு உயிரினங்கள், மூன்றாம் படியில் மூன்றறிவு, நான்காம் படியில் நான்கறிவு, ஐந்தாம் படியில் ஐந்தறிவு, ஆறாம் படியில் மனிதன், மனிதர்களின் பழக்க வழக்கம், ஏழாம் படியில் உயர்ந்த மகான்கள், எட்டாம் படியில் பகவானின் அவதாரங்கள், ஒன்பதாம் படியில் தெய்வங்களின் பொம்மைகள் வைக்கப்படும்.வரும், 17ல் நவராத்திரி விழா துவங்குகிறது. இந்தாண்டு ஸ்பெஷலாக, கமலாம்பாள் பொம்மை, ராமர் சரணாகிரி, பெருமாள், விவசாயிகள் செட் புது வரவாக உள்ளது. மேலும், மீனாட்சி, குருவாயூர், கிரிக்கெட், காய்கறி என, செட் பொம்மைகளும் காண்போரை கவர்வதாக உள்ளன.கொலு பொம்மை மொத்த விற்பனையாளர் சரவணகுமார் கூறுகையில், கொலு பொம்மைகள் களிமண் மற்றும் காகித கூழால் தயாரிக்கப்படுகிறது. ரூ.10 முதல், 8,500 ரூபாய் வரை பல்வேறு ரகங்களில் விற்பனைக்கு உள்ளன. இவ்வாண்டு, விவசாயிகள் செட் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையால், வாடிக்கையாளர்கள் வருகை மிகவும் குறைவு. கடந்தாண்டு விற்பனையோடு ஒப்பிடுகையில், 20 சதவீதம் கூட இல்லை, என்றார்.