பதிவு செய்த நாள்
14
அக்
2020
11:10
நாகர்கோவில்: போலீசின் அணிவகுப்பு மரியாதையுடன், சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை பவனி நேற்று புறப்பட்டது.
கேரளா, திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவுக்காக, குமரி மாவட்டம், பத்மனாப புரம் சரஸ்வதிதேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலைகள், மூன்று நாள் பவனியாக, திருவனந்தபுரம் எடுத்து செல்லப்படும்.நவராத்திரி முழுதும் அங்கு இருக்கும். மன்னர் காலம் முதல் கடைப்பிடிக்கப்படும் இந்த வழக்கத்தை, கொரோனாவை காரணம் காட்டி, சரக்கு வாகனத்தில் கொண்டு செல்ல, கேரள அரசு முடிவு செய்தது. இதன்படி, நேற்று காலை சுசீந்திரத்தில் இருந்து, முன்னுதித்த நங்கை சிலை புறப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்ததும், தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர்.நேற்று மதியம், இந்த பவனி பத்மனாபபுரம் வந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு நவராத்திரி பவனி புறப்படுகிறது.கேரள போலீசார் வர அனுமதி இல்லாததால், இங்கும் தமிழக போலீசார் மரியாதை செலுத்துகின்றனர்.பவனி, அக்., 16 மாலை, திருவனந்தபுரம் சென்றடையும். 17ல் நவராத்திரி பூஜை துவங்குகிறது.