பதிவு செய்த நாள்
14
அக்
2020
06:10
சத்தியமங்கலம்: ஆசனுார் வனப்பகுதியில், பழங்குடியின மக்கள் வழிபட்டு வந்த, சுவாமி சிலைகளை வனத்துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தி புலிகள் காப்பகம், ஆசனுார் வனக் கோட்டம், ஆசனுார் வனச்சரகம், அரேபாளையம் பிரிவு அருகே வனப்பகுதியில், பிசில் மாரியம்மன் கோவில் உள்ளது. வனப்பகுதியில் திறந்தவெளியில் அமைந்துள்ள இக்கோவிலில், ஆசனுார், அரேபாளையம், ஓங்கல்வாடி, சென்டர்தொட்டி, பங்களா தொட்டி கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
நேற்று மாலை ஆசனுார் வனத்துறையினர், பிசில் மாரியம்மன் சிலையை அகற்ற வந்தனர். இதையறிந்து மலை கிராம மக்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பிசில் மாரியம்மன் கோவில், 50 ஆண்டு பழமையானது. வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்திருந்தாலும், விசேஷங்களுக்கு இங்கு தான் கூடுகிறோம். சிலைகளை அகற்றாமல், மற்ற வேலைகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ‘புலிகள் காப்பக வனப்பகுதி என்பதால், கட்டடம் இல்லாமல் திறந்த வெளியில் இருக்கும் சுவாமி சிலைகளை அகற்ற உத்தரவு உள்ளது. இதனால் சிலைகளை அகற்றுகிறோம்’ என்று, வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வன அலுவலர் நாயுடு, ஆசனுார் பஞ்., தலைவர் சுப்பிரமணி, பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி ஜெயபாரதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதியில் உள்ள கோவில்களில், தரிசனம் செய்ய முறையான சமுதாய உரிமை அனுமதி வாங்க வேண்டும். மேலும், வனப்பகுதியில் உள்ள கட்டடங்கள் இல்லாத, திறந்தவெளி மற்றும் மரத்தடியில் அமைந்துள்ள சிலைகளை அகற்ற உத்தரவு வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மக்கள் இதை ஏற்காததால், இரவு வரை போராட்டம் நீடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.