பதிவு செய்த நாள்
15
அக்
2020
05:10
ஈரோடு: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து, பழநி தேவஸ்தானம் சார்பில், மீண்டும் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்காக,சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம், சித்தோடு வெல்லம் மார்க்கெட்டில், அதிகளவில் நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் கொள்முதல் செய்யப்படும். சில ஆண்டுகளுக்கு முன், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து, பழநி தேவஸ்தானம் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்துக்கு, அதிகாரிகள் நேரில் வந்து கரும்பு சர்க்கரை வாங்கி சென்றனர். அப்போது, தரம் குறைவு, கலப்படம் உள்ளிட்ட சில புகார்கள் வந்ததால், தேவஸ்தானம் கொள்முதலை நிறுத்தியது. பின், இ-டெண்டர் மூலம் நேரடியாக சர்க்கரையை, கொள்முதல் செய்தது. இதற்காக குறிப்பிட்ட தரத்தை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் கொள்முதலை தொடர்ந்தனர். ஒவ்வொரு ஏலத்திலும், 30 கிலோ எடை கொண்ட, 5,000 மூட்டை வரை, பழநி தேவஸ்தானம் வாங்கி சென்றது. இந்த விற்பனை நிறுத்தப்பட்டதால், சர்க்கரை உற்பத்தியாளர்கள், கரும்பு விவசாயிகள் கவலையடைந்தனர். ஈரோடு கலெக்டராக இருந்த பிரபாகரன், தற்போது அறநிலையத்துறை கமிஷனராக பொறுப்பேற்றதால், அவரிடம் இக்கோரிக்கையை நேரடியாக விவசாயிகள் முன்வைத்தனர். இதன் அடிப்படையில் வரும் சனிக்கிழமை முதல், ஒவ்வொரு வாரமும் நடக்கும் கரும்பு சர்க்கரை ஏலத்தில், பழநி தேவஸ்தானம் பங்கேற்க யோசனை தெரிவிக்கப்பட்டது. இதற்காக, இன்று காலை, 10:30 மணிக்கு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துவக்க நிகழ்ச்சி கூட்டம் நடத்துகின்றனர். இதில் கரும்பு விவசாயிகள், சர்க்கரை உற்பத்தியாளர்கள் தங்களின் தேவை, தரம் குறித்து விளக்க உள்ளனர்.