பதிவு செய்த நாள்
17
அக்
2020
02:10
திருநீர்மலை : திருநீர்மலையில், ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, பா.ஜ.,வினர் கொடி கம்பம் நட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநீர்மலையில், புறவழிச்சாலை அணுகு சாலை - திருநீர்மலை சாலைகளை ஒட்டி, ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 64 சென்ட் நிலம் உள்ளது. புகார்காலியாக உள்ள, அந்த நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, சில நாட்களுக்கு முன், பிரியாணி கடை போடப்பட்டது. இதையறிந்த, கோவில் செயல் அலுவலர் சக்தி மற்றும் ஊழியர்கள், ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கூறினர். இது தொடர்பாக, சங்கர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், நிலத்தை அளவீடு செய்து, கோவில் நிலம் எனில், கல் நடுமாறு கூறினர்.இதையடுத்து, நேற்று காலை, நிலத்தை அளவீடு செய்ய, கோவில் நிர்வாகத்தினர் சென்றனர். இதற்கிடையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில், நேற்று முன்தினம், இரவோடு இரவாக, பா.ஜ.வினர் கொடி கம்பம் நட்டனர்.
பரபரப்பு: மேலும், அளவீடு செய்தபோது, அவர்கள் குறுக்கீடும்செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சங்கர் நகர் காவல் ஆய்வாளர் முகமதுபரக்கத்துல்லா மற்றும்போலீசார் விரைந்து, பேச்சில் ஈடுபட்டனர்.இதற்கிடையில், அங்கு குவிந்த தி.மு.க.,வினர், ஆக்கிரமிப்பு கடையையும், பா.ஜ., கொடி கம்பத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என, அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு, ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில், அகற்றப்படும் என, தெரிவித்தனர்.இதற்கிடையில், பா.ஜ., கொடி கம்பம் அருகே, தி.மு.க.,வினர், கொடி கம்பம் நட முயன்றனர். அதை தடுத்து நிறுத்திய போலீசார், பா.ஜ., கொடி கம்பத்தை உடனடியாக அகற்றினர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு கடையையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவில் செயல் அலுவலர் பெ.சக்தி கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான இடத்தில், தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதை தடுக்க முயன்ற போது, நிலம் உரிமை தொடர் பான பிரச்னை எழுந்தது. இதையடுத்து, சர்வேயரை கொண்டு, நேற்று காலை, அளவீடு செய்தோம்.அதில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம், கோவிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது.தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றி, சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினர்.