பதிவு செய்த நாள்
17
அக்
2020
02:10
சிதம்பரம் : சிதம்பரத்தில் அரசின் முயற்சியால், ஐந்திற்கும் மேற்பட்டபழமையான குளங்கள் துார் வாரி சீரமைத்ததால், நகரில் நிலத்தடிநீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. கடலுார் மாவட்டத்தில், உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ள சிதம்பரம் நகரை சுற்றி 15 க்கும் மேற்பட்ட பழமையான குளங்கள் உள்ளன. நகர மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கிய இக்குளங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி , துார்ந்து போயின. சில இடங்களில் குளம் இருந்த அறிகுறியே இல்லை.இந்நிலையில், சிதம்பரம் நகரில் குளங்களை துார்வாரி சீரமைக்க முன்பிருந்த சப் கலெக்டர் விசுமகாஜன் முயற்சி செய்தார். கடந்த ஆண்டு நவம்பரில் சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலம், நகரில் உள்ள முக்கிய குளங்கள் துார் வார ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில் ஞானபிரகாச கோவில் குளம், நாகசேரி குளம், ஓமகுளம், ஆயிகுளம், குமரன் குளம், தச்சன் குளம், அண்ணா குளம், பாலமான் குளம் துார் வார அனுமதி வழங்கப்பட்டது. ஞான பிரகாச கோவில் குளம் துார்வாரும் பணிகள் முற்றிலும் முடிந்து சுற்றுச் சுவர் அமைத்ததால் தண்ணீர் தேங்கி ரம்யமாக காட்சி அளிக்கிறது. திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவி ரத்தினசாலையும் நீராடி இளமைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க இளமையாக்கினார் கோவில் குளம் என்.எல்.சி., நிறுவனத்தால் துார் வாரப்பட்டுள்ளது. சுற்று சுவர் பணிகளை கோவில் அறங்காவலர் குழுவினர் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் ஓமகுளம், நாகசேரி குளம் ஆக்கிரப்புகள் அகற்றப்பட்பட்டு துார் வாரும் பணி முடிந்துள்ளது.வாய்க்கால்களை காணோம்சிதம்பரம் நகரில் பல குளங்களுக்கு கொள்ளிடம், வீராணம் ஏரியிலிருந்து காவிரி நீர் வரும் வகையில் வாய்க்கால்கள் கடந்த காலங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியதால், துார்வாரியும் பயனில்லை.
குளங்களுக்கு நீர்வரத்து வாய்க்கால்கள் முக்கிய பிரச்னையாக உள்ள நிலையில், தற்போதைய சப் கலெக்டர் மதுபாலன், வடிகால் வாய்க்கால்களை கண்டுபிடித்து துார் வாரி, குளங்களுக்கு தண்ணீர் வர வழிவகை ஏற்படுத்த வேண்டும் என, வருவாய் துறையினரை முடுக்கி விட்டுள்ளார்.மேலும் துார் வார வேண்டிய மீதமுள்ள ஆயிகுளம், குமரன் குளம், தச்சன் குளம், அண்ணா குளம், பாலமான் குளம் ஆகிய குளங்களை விரைந்து துார் வாரினால் வரும் கோடை காலங்களில் சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. மாற்று இடம் கிடைக்குமாசிதம்பரம் நாகசேரி குளம், ஓம குளம், தில்லையம்மன் வாய்க்கால் பகுதியில் வீடு கட்டியிருந்த 800க்கும் மேற்பட்ட குடும்பத்தார் அங்கிருந்து அகற்றப்பட்டனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து போராடியும், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் மாற்று இடம் இதுவரை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, தொகுதி எம்.எல்.ஏ., கூறியபடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுத்தால், பல ஆண்டுகளாக குளக்கரையில் வசித்த மக்களுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.