பதிவு செய்த நாள்
20
அக்
2020
05:10
சென்னை : மயிலாப்பூர் மாடவீதியில், தற்போது இடம் பெற்றுள்ள ஆளுயர பொம்மை ஒன்று, அச்சு அசலாக ஆள் நிற்பது போலவே இருப்பதால், பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
நவராத்திரியை குதுாகலமாக்கும் விதத்தில், மயிலாப்பூர் மாட வீதிகளில், விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், அசோக்குமார் என்பவர் வைத்துள்ள நவராத்திரி கொலு பொம்மை கடையின் முகப்பில், ஆளுயர பொம்மை ஒன்றை வைத்துள்ளார்.நவராத்திரி சீசன் நேரம் போக, மீத நேரத்தில், ஆர்டர் எடுத்து, ஆளுயர பொம்மை செய்து தருவது தான் தொழில் என்கிறார் அசோக்குமார்.காஞ்சிபுரத்தில் பெயின்டராக வேலை பார்ப்பவரும், இவரது உறவினருமான உமாபதி என்பவரை மாடலாக வைத்து, பைபரில் உருவாக்கிய பொம்மையை, கடை முகப்பில் காட்சிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து, ௧௦ நாள் உழைப்பில், 1௦ கிலோ எடையில், ஐந்தரை அடிக்கு, நிஜமான ஆள் போன்று, ௨௦ ஆயிரம் ரூபாய் செலவில், இந்த பொம்மையை உருவாக்கி உள்ளனர். இந்த பொம்மைக்கு, நிஜமான முடியை பயன்படுத்தி உள்ளனர். சட்டையை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்றும் விதத்தில், பின்பக்கம் ஜிப் வைத்து தைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து, அவர் மேலும் கூறுகையில், பார்வையாளர்களுக்கு, இப்படியும் பொம்மை செய்ய முடியும் என, தெரியப்படுத்தவும், தங்கள் உருவத்தையோ, தங்கள் வீட்டில் உள்ளோர் உருவத்தையோ கூட விரும்பினால் செய்து தருவோம் என விளக்கவும், இந்த பொம்மையை காட்சிப்படுத்தி உள்ளோம், என்றார்.