பதிவு செய்த நாள்
24
அக்
2020
05:10
திரிசூலம்: திரிசூலத்தில், கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்கு, அதிகாரிகள் நேற்று, சீல் வைத்தனர்மீதமுள்ள, 54 கட்டடங்களும் விரைவில் கைப்பற்றப்படும் என, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, பல்லாவரத்தை அடுத்த திரிசூலத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், திரிசூலநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 77.82 ஏக்கர் நிலம், பல்வேறு சர்வே எண்களில், அக்கிராமத்தில் உள்ளது. இதில், 19 ஏக்கர் நிலம், பல்வேறு பயன்பாட்டிற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், வாடகைக்கு விடப்பட்டுள்ளது.மீதமுள்ள, 58.82 ஏக்கர் நிலம், பல ஆண்டுகளுக்கு முன், விவசாய நோக்கத்திற்காக, குத்தகைக்கு விடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின், விவசாயம் செய்ய போதிய தண்ணீர் வசதி இல்லாததால், காலி இடமாகவே பராமரிக்கப்பட்டது.இதை பயன்படுத்தி, அப்பகுதியைச் சேர்ந்தவர் சிலர், நேரடியாக ஆக்கிரமித்து, கட்டடங்களை கட்ட துவங்கினர். கோவில் நிர்வாகம், கட்டுமான பணிகளை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள், அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கட்டடங்களை கட்டினர்.மொத்தம், 25 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அனுமதியின்றி, பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்நிலையில், அறநிலையத் துறை சட்டப்பிரிவு, 78ன் கீழ், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டனர்.அது சம்பந்தமாக விசாரணை நடத்தி, 64, 65, 67/1, 67/2, 68 ஆகிய சர்வே எண்களில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, 55 கட்டடங்களை அகற்ற, ஜூனில், அறநிலையத் துறை சென்னை மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். முதல் கட்டமாக, போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை, அதிகாரிகள், ஒரு கட்டடத்தை பூட்டி, சீல் வைத்து, அறநிலையத் துறை வசமாக்கினர். அந்த கட்டடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டன.அடுத்த கட்டமாக, எஞ்சியுள்ள, 54 கட்டடங்களை கைப்பற்றவும், அதன்பின், கைப்பற்றப்பட்ட கட்டடங்களை குத்ததைக்கு விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.