காரியாபட்டி : கிழங்கு வகைகளில் சாகா வரம் கொண்ட மூலிகை கிழங்குதான் ஆகாச கருடன் கிழங்கு. சித்தர்கள் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தினர். சில காலங்கள் இந்த கிழங்கினுடைய பயன்பாடு விட்டு போனதால் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் மலைப் பகுதிகளுக்கு சென்ற நரிக்குறவர்கள் இதன் அருமை பெருமைகளை தெரிந்து சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தினர். கருடன் வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஆகாச கருடன் கிழங்கு என பெயர் வந்தது.நிலை வாசலில் தொங்கவிட்டால் விஷ ஜந்துக்கள் அண்டாது. விஷ ஜந்துக்கள் கடித்தாலும் விதிமுறைப்படி சாப்பிட்டால் விஷ முறிவு ஏற்படும்.
தீய சக்திகளான ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி வீட்டிற்குள் வர விடாது. வீட்டில் மன அமைதி ஏற்படும். இந்த மூலிகை கிழங்கு வளர தண்ணீர் தேவைப்படாது. காற்றில் உள்ள ஈரப்பதமே போதுமானது. வீட்டு வாசலில் கட்டப்பட்ட கிழங்கு சுருங்கி விட்டது என கவலைப்பட தேவையில்லை. தீய சக்திகளை தன்னுள் ஈர்த்துக் கொண்டது என அர்த்தம். இந்த வகையான கிழங்குகள் மலைப் பகுதி களில் அதிகம் காணப்படும். வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு தற்போது காரியாபட்டி பகுதியில் கண்திருஷ்டி கிழங்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.