* வேதாரண்யம் சிவன் கோயிலில் வீணை இல்லாத சரஸ்வதி சன்னதி உள்ளது. இங்குள்ள அம்மனின் குரல் இனிமையைக் கேட்டு நாணியதால் வீணை இசைப்பதை சரஸ்வதி விட்டு விட்டாள். * ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் பிரம்மா கோயிலில் வீணை இல்லாத சரஸ்வதியை தரிசிக்கலாம். * சரஸ்வதியின் பிறந்த நட்சத்திரம் மூலம். சொல்லின் செல்வன் எனப்படும் அனுமனும் இதே நட்சத்திரம் தான். * அன்ன வாகன சரஸ்வதியை ‘ஹம்ச வாகினி’ என்றும் மயிலில் இருக்கும் சரஸ்வதியை ‘மயூர வாகினி’ என்றும் அழைப்பர். * பிரம்மாவின் நாவில் சரஸ்வதி குடியிருக்கிறாள். இதனால் ‘நாமகள், வாக்தேவி’ எனப்படுகிறாள்(sdfdfds) . * தமிழ் காப்பியமான சீவக சிந்தாமணியில் ‘நாமகள் இலம்பகம்’ என ஒரு பகுதி உள்ளது. * தட்சிணாமூர்த்தி, சரஸ்வதியை வழிபட்டால் ஞானம் கிடைக்கும். ஞானத்தின் அடையாளமாக இருவரும் கையிலும் ஸ்படிகமாலை இருக்கும். * சப்தமாதர் என்னும் ஏழு பெண் தெய்வங்களில் சரஸ்வதிக்கு ‘பிராம்மி’ என்று பெயர். * சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர். இவருக்காக கிழங்கு விற்கும் பெண்ணாக வந்து சரஸ்வதி உதவி செய்தாள். * பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி சத்திய லோகத்தில் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. * ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப் பரணி நுாலில் சரஸ்வதி வாழ்த்து பாடல் உள்ளது. * பாலித்தீவிலுள்ள தம்பாக் ஸைரிங் குளத்தில் விஜயதசமியன்று பக்தர்கள் புனிதநீராடுவர். இங்கு சரஸ்வதியின் வாகனமான அன்னத்தை மஞ்சள் நிறத்தில் வடிக்கின்றனர். * ஜப்பானியர்கள் சரஸ்வதியை ‘பென்டென்’ என்பர். இங்கு மார்ச் 3ல் கொலு கண்காட்சி வைப்பர். * சரஸ் என்பதற்கு நீர், ஒளி என்பது பொருள். சரஸ்வதிக்குரிய திதி வளர்பிறை நவமி. புரட்டாசியில் சரஸ்வதி பூஜையன்று வருவது மகாநவமி எனப்படும். * திருவாரூர் மாவட்டம் கூத்தனுார் கோயிலில், ‘மலரியைச் சேர்ந்த கவிச்சக்கரவர்த்தியின் பேரனார் ஆகிய ஓவாத கூத்தர் சரஸ்வதிக்கு கோயில் கட்டினார்’ எனக் கல்வெட்டு உள்ளது. ஒட்டக்கூத்தரின் பேரர் ஓவாத கூத்தர் இக்கோயிலைக் கட்டினார். * கும்பகோணத்தில் இருந்து வேப்பத்துார், கஞ்சனுார் வழியாக குத்தாலம் ரோட்டில் 18 கி.மீ., துாரத்தில் உள்ளது திருக்கோடிக்காவல். இங்குள்ள கோயிலில் உள்ள சரஸ்வதி, விநாயகருக்கு தீபம் ஏற்ற பக்தர் ஒருவர் 108 கழஞ்சு தங்கம் தானம் அளித்தார். ஒரு கழஞ்சு என்பது 5.300 கிராம். அதாவது, 572.4 கிராம் தங்கம் கொடுத்துள்ளார். * சரஸ்வதி அருளால் மகாபாரதம், பிரம்ம சூத்திரம், பதினெட்டு புராணங்களை எழுதியவர் வியாசர். இவற்றை அவர் ‘மானா’ என்ற குகையில் தங்கியிருந்து எழுதினார். ஓலைச்சுவடிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியது போல இந்த குகை காட்சியளிக்கும். இக்குகை ‘வியாச புஸ்தக்’ (வியாச புத்தகம்) எனப்படுகிறது.