பதிவு செய்த நாள்
26
அக்
2020
09:10
தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1035 வது சதய விழா இன்று காலை துவங்கியது.
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளான ஐப்பசி சதய நட்சத்திரமான இன்று 1035வது சதய விழா துவங்கியது.
அதையொட்டி, காலை ஆறு மணிக்கு பெரியகோவிலில் மங்கள இசை நடந்தது.
தொடர்ந்து கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோயிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணத்தை பாடினர். இதனைத் தொடர்ந்து கோவிலின் வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் ராவ், சதய விழாக்குழு தலைவர் திருஞானம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தர்மபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவிலின் அர்த்த மண்டபத்திலுள்ள குஜராத்திலிருந்து மீட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவி சிலை முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 மங்கள பொருட்களால் பேராபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது . இரவு 8 மணி அளவில் கோவில் வளாகத்தில் ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி ஆகியோரது சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்பிரகாரம் வீதி உலா நடைபெறுகிறது.
ஒரு நாள் நிகழ்வு : ராஜராஜ சோழனின் சதய விழா ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும், இவ்விழாவின் போது பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஒரு நாள் நிகழ்வுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவிலில் இன்று பக்தர்கள் குறைந்த அளவே சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர், சதய விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்கள் சார்பாக ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்காக தஞ்சாவூர் நகரம் முழுவதும் பலத்த போலீசார் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.