நாலுபேருக்காவது நன்மை செய்யுங்கள்: சிருங்கேரி சுவாமி அருளுரை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2012 10:05
மதுரை தபால்தந்திநகர் அருகே உள்ள திருமலைநகர் திருப்பதி தேவஸ்தான தகவல்மையத்தில் உள்ள பத்மாவதிதாயார் நந்தவனத்தை நேற்று சிருங்கேரி பாரதீதீர்த்த சுவாமி திறந்து வைத்தார். ஆடிட்டர் கோபாலகிருஷ்ணன் வரவேற்பு அளித்தார். 1250 சதுரஅடி பரப்புள்ள நந்தவனத்தை திறந்த வைத்த சுவாமி, மரக்கன்றுகளை நட்டார். பக்தர்களுக்கு ஆசிவழங்கி பேசியதாவது:மனிதனுக்கு பக்தி மிக அவசியம். அனைத்திற்கும் மேலானவராக கடவுள் மட்டுமே இருக்கிறார். அவர் யாரிடமும் õரபட்சம் காட்டுவதில்லை. கடவுளுக்கு எத்தனையோ பெயர் இருந்தாலும் அவர் ஒருவரே. அவரே மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரராகவும், சிருங்கேரியில் சாரதாம்பாளாகவும், திருப்பதியில் பாலாஜியாகவும் இருந்து அருளாட்சி நடத்துகிறார். தூயபக்தியுடன் வணங்கினால், அவருடைய பூரண அருளுக்கு யாரும் பாத்திரமாகலாம். அனுபவத்தின் வாயிலாக மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனால் ஒருவருடைய வாழ்க்கை அமைகிறது. வசதியாக வாழ்ந்தாலும், ஏழையாக வாழ்ந்தாலும் நம்மிடம் இருக்கும் செல்வம் அனைத்தும் கடவுளுக்கே சொந்தமானது. அதை தர்மவழியில் செலவழிப்பது அவசியம். நம்மால் முடிந்த உதவிகளை நாலுபேருக்காவது செய்ய வேண்டும். வாழ்வு உயர வேண்டுமானால் கடவுள் பக்தி, குரு பக்தி மிக அவசியம். இந்த அடிப்படையிலேயே இங்கு உள்ள திருப்பதி தேவஸ்தான மையத்தில் திருப்பதி பவனம், பத்மாவதி நந்தவனத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றனர். அனைவரும் வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்றார். நேற்று காலையில் பைபாஸ்ரோடு சிருங்கேரி சங்கரமடத்தில் சதசண்டீ மகாயாகம் துவங்கியது. பின், சுவாமி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இரவில் சந்திரமவுலீஸ்வர பூஜை செய்தார்.