பதிவு செய்த நாள்
29
அக்
2020
05:10
கள்ளக்குறிச்சி: வீரசோழபுரம் சிவன் கோவிலை, பழமை மாறாமல் புனரமைப்பு செய்வதற்காக, அறநிலையத்துறை மாநிலக் குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், இக்கோவிலைக் கட்டினார்.நாகரீஸ்வரமுடைய நாயனார் என, கோவிலுக்கு பெயர் சூட்டியதாக, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் மருவி, அர்த்தநாரீஸ்வரர் அனுதாம்பிகை என அழைக்கப்படுகிறது. பல்லவர் காலத்தில் புனரமைக்கப்பட்ட இக்கோவிலில், கல்வெட்டுகள், நான்கு திசைகளிலும் நந்தி சிலைகள், கோவில் நுழைவுப் பகுதியின் மேற்புறத்தில் தாமரை வடிவ சிற்பத்தில் காற்றினால் சுற்றும் உருளை, நவகிரகங்கள் ஆகியவை உள்ளன.
சுற்றுச்சுவர்: வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் பராமரிக்கப்படாததால், சுற்றுச்சுவர், சுவாமி சிலைகள், தேர், சகடை ஆகியவை சேதம் அடைந்துள்ளன.இங்குள்ள சிலைகள் திருடு போனதால், பாதுகாப்பு கருதி, 13 சாமி சிலைகள், விழுப்புரம் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.ஆண்டுதோறும் மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தின் போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அதிகளவிலான திருமணங்கள் நடக்கின்றன. இக்கோவிலை புனரமைக்காமல், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இது குறித்து, தினமலர் நாளிதழில், படத்துடன் நேற்று தலைப்பு செய்தி வெளியானது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை மாநிலக் குழுவினர், தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் பொறியாளர் முத்துசாமி - ஓய்வு, தொல்லியல் துறை அறிஞர் வசந்தி - ஓய்வு, கட்டடக் கலை வல்லுனர் மதுசூதனன். ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, பொறியாளர் ராகவன் ஆகியோர், நேற்று கோவிலை ஆய்வு செய்தனர்.
கருங்கற்கள்: அப்போது, கோவில் சிற்பங்கள், கல்வெட்டுகள், மண்டபம், விமானம் ஆகியவற்றின் சுற்றுச்சுவரின் நீள, அகலத்தை குறிப்பெடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, பழமை மாறாமல், சுண்ணாம்புக் கலவை, கருங்கற்கள் கொண்டு, கோவிலை புனரமைக்க ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான அறிக்கை, அறநிலையத் துறையிடம் சமர்ப்பிக்கப்படும் என, மாநிலக் குழு தெரிவித்தது.
கிரிவலம்: முன்னாள் ஊராட்சி தலைவர் தெய்வீகன் மற்றும் கிராம மக்கள், ஆகம விதிப்படி திருப்பணி செய்தல், ஏழு அடுக்கு ராஜகோபுரம் அமைத்தல், கிரிவலம் செல்ல கோவில் வெளிப்பகுதியில், 300 மீட்டர் சாலை.மடப்பள்ளி, புதிய வாகனங்கள், இரும்பு சகடை, அன்னதானக் கூடம், குளம், நந்தவனம் உள்ளிட்ட, 33 கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என, மாநிலக் குழுவினரிடம் மனு வழங்கினர்.