பதிவு செய்த நாள்
29
அக்
2020
05:10
சென்னை:அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட அனுமதிக்கக் கூடாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரனிடம், ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் பழமை வாய்ந்த கோவில். இந்தக் கோவில் நிலத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் கட்டக் கூடாது. கட்டடம் கட்டுவதற்கு எத்தனையோ தரிசு நிலங்கள் அரசிடம் உள்ளன. கோவில்களுக்கு, நம் முன்னோர்கள் எந்த நோக்கத்திற்கு நிலங்களை வழங்கினார்களோ, அந்த நோக்கத்தை விட்டு, வேறு எந்த பயன்பாட்டிற்கும் கோவில் நிலங்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில், வீரசோழபுரம் கோவில் இடத்தில், அரசு பணிகள் செய்வது விதி மீறல் செயல்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.